" சுப்பிரமணி வாத்தியார் நினைவுகள் "


"வீட்டுல உக்காந்து பீடி சுத்த வேண்டியதுதானே..ஆளையும் மூஞ்சியையும் பாரேன்..வந்துட்டா ஸ்கூலுக்கு"


சுப்பிரமணி வாத்தியாரின் வகுப்பு தினமும் இப்படித்தான் ஆரம்பிக்கும்


"அய்யா வேண்டாய்யா வேண்டாய்யா வேண்டாய்யா" மாணவர்கள் கதற கதற, டவுசர் கிழிய அடித்து நொறுக்குவார். சில சமயம் டவுசரில் இருந்து தூசிகள் பறக்க அடிப்பார்.


அடிவாங்குபவனைத் தவிர, மற்ற மாணவர்களுக்கு அவர் அடிக்கின்ற ஸ்டைலை பார்க்க ஆனந்தமாக இருக்கும். அப்பொழுது எங்களுக்கு வேடிக்கை பார்க்கின்ற வயதுதான்.


அவரிடம் திட்டுவாங்காத மாணவிகளும், அடி வாங்காத மாணவர்களும் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை. மாணவர்களை விடவும் மாணவிகளை சகட்டு மேனிக்கு திட்டுவார்.


அவரிடம் அடி வாங்காமல் தப்பிபதற்காகவே அவரைச் சுற்றி ஜால்ரா போடும் மாணவர்களின் வட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.


அவர் வரலாற்று பாடம் எடுக்கும் காட்சியினை இப்பொழுது அசைபோட்டுப் பார்த்தாலும் சிரிப்பாக வரும்


"அசோகர் இருக்காரே அவருக்கு வேற வேலை இல்லைப்பா.. சும்மா இருக்க வேண்டியதுதானே சாலையோரத்தில மரம் நட்டுக்கிட்டே இருப்பார்"


"சமாதானமா போயிருந்தாஇப்படி நடந்திருக்குமா..? தெனாவட்டுல திரிஞ்சானுவ..இப்ப பாருங்க பானிபட் போர்ல வந்து நிற்குது.."


"ஒளரங்கசீப் இருக்கானே ஒளரங்கசீப்....அவன் அவங்க அப்பனை ஜெயில்ல போட்டு தண்ணி கொடுக்காம கொடுமை படுத்தினாப்பா.."


இடையில் எவனாவது சந்தேகம் கேட்டால் தொலைஞ்சான் அவன்.


முதல்ல பாடத்தை கவனில்ல..அங்க எங்கல அண்ணாந்து பாத்துகிட்டு இருக்கே..அப்படி பார்த்தா மண்ணயா புரியும்...எழுந்திருல முட்டிக்கால் போடுல" என்று அதட்டிவிடுவார்


அதனால நாங்க யாருமே சந்தேகம் கேட்க மாட்டோம்.


தனக்கு புரியாத பாடங்களையோ அல்லது தயார்படுத்தாமல் வருகின்ற நாட்களிலோ சக மாணவர்கள் யாரையாவது எழுந்திருக்கச் சொல்லி வாசிக்கச் சொல்லி விடுவார்.


கொடி நாள் - பள்ளி நிதி – நோட்டுப்புத்தகம் பணம் என்று மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய பணத்திற்கு இவரையே நிர்வாகம் பொறுப்பாளராக நியமிக்கும்